டில்லி
அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவையால் ஏர்டெல் மற்றும் வோடபோன் தங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜியோவும் பி எஸ் என் எல் லும் இன்னும் உயர்த்தவில்லை.
தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா இரண்டும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் அரசு நிறுவனமான பி எஸ் என் எல் ஆகிய மூன்றை விட தற்போது இந்த நிறுவனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோ வருகைக்குப் பின்னர் வர்த்தக போட்டி காரணமாக இந்த நிறுவனங்கள் கட்டண உயர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை.
சமீபத்தில் வோடபோன் மற்றும் எர்டெல் ஆகிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிம நிலுவைத் தொகை, அபராதம் மற்றும் வட்டியாக ரூ74000 கோடி செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான கடைசி தேதி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஆகும்.
அத்துடன் தொலை தொடர்புத்துறை விரைவில் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்த உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. ஆனால் தற்போதுள்ள நிலைமையில் மாறுதல் ஏற்படலாம் என ஜியோ மற்றும் பி எஸ் என் எல் ஆகிய நிறுவனங்கள் காத்திருக்கின்றன.