லடாக்:
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சோகம் நடைபெற்றுள்ளது.
காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் லடாக் யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. லடாக்கில் இருந்து வடகிழக்கு திசையில் காரகோரம் மலைத்தொடர் உள்ளது.
இந்த மலையின் உச்சியில் சியாச்சின் பகுதி அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 18,000 அடி உயரத்தில் உள்ளது. சர்வதேச எல்லையான சியாச்சின் மலைப்பகுதி, உலகிலேயே மிக உயரமான போர் புரியும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை அந்தப்பகுதியில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், 4 பாதுகாப்புப் படை ராணுவ வீரர்கள், 2 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட 6 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்து இருப்பதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.
இந்த திடீர் பனிச்சரிவில் சிக்கிய மேலும் 8 வீரர்களில், 7 வீரர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.