ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று சட்டப்பிரிவு 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.   அத்துடன் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு எழலாம் என்பதற்காகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநிலம் எங்கும் தொலைத் தொடர்பு, இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.   முன்னாள் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்க்ட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலத்தில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.   சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.   இந்த ரெயில் சேவை முதல் கட்டமாக ஸ்ரீநகர் முதல் பனிஹல் வரை தொடங்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 3 வரை இயக்கப்படுகிறது.