பல் போனால் சொல் போச்சு என்பது ஒரு பழமொழி! இப்போது அந்தப் பல்லில் பிரச்சினை என்றால் விண்வெளிக்கு செல்ல முடியாது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு, தகுதியான விமானிகளைத் தேர்வுசெய்யும் பணியில், பற்களில் குறைபாடு உள்ளவர்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்தான் ககன்யான். இதற்கான தகுதியுள்ள வீரர்களை அனுப்பும் தேர்வு நடைபெற்று வருகிறது. ரஷ்ய நிபுணர்களின் உதவியுடன் நடைபெற்ற ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 60.
இதன்பொருட்டு, இந்திய விமானப்படையின் விண்வெளி மருத்துவ மைய நிபுணர்களால் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்குப் பிறகு உடல் தேர்வு நடத்தப்பட்டதில் மொத்தம் 60 பேரில் தேறியவர்கள் வெறும் 12 பேர் மட்டுமே.
அந்த 12 பேர், ரஷ்யாவில் கடந்த 45 நாட்களாக தீவிர பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுள் 7 பேர் பயிற்சியை முடித்துவிட்டார்களாம்! இந்த 7 பேரிலும், இறுதியாக தேர்வாவது மொத்தம் 3 பேர்களே!
இறுதித்தேர்வு நடத்தப்படுவது வரும் 2022ம் ஆண்டில். கடந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாத காலகட்டங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில், பற்கள் தொடர்பான பிரச்சினைகளால் பலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், விண்வெளியின் சூழல் மாற்றம், பல் பிரச்சினை உள்ளவர்களை மேலும் பாதிக்கும் என்பதும் ஒரு காரணம்.