டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிக்கிக் கொண்டார்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. 2 வாரங்களை கடந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 40 சதவீதம் மக்கள், ஏழை குடும்ப பின்னணியில் இருப்பதால், கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, போலீசாரின் தடுப்புகளை மீறி, மாணவர்கள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தை முற்றுகையிட முயன்றனர்.
காரணம், அந்த கல்வி கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டிருந்தனர். முன்னேறிச் செல்ல முயன்ற மாணவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, திடீரென மோதல் மூண்டது. மாணவர்களை விரட்ட, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மாணவர்கள் போராட்டத்தால் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நான்கரை மணி நேரத்துக்கும் ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் சிக்கிக் கொண்டார்.
அவர்களிடம் பேசிய அமைச்சர் பொக்ரியால், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக மாணவர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தையொட்டிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.