கொல்கத்தா

யோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

நேற்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.  சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.   இந்த தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இது வரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.   மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், “இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் அனைவரும் இந்த தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்.

விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என நம்புகிறோம்.   இந்த கோவில் கட்டமைப்புக்காக உயிர்த் தியாகம் செய்த கர்சேவகர்களின் ஆத்மா இப்போது சாந்தி அடைந்திருக்கும்.    ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து அமைதியாக உள்ளனர்.  அவர்களுக்குத் தேசிய மற்றும் சமுதாய நலனுக்கான விஷயங்களில் அமைதி காப்பது வழக்கமாக உள்ளது.  அதை விட்டு வெளி வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு வெளியாகி சில மணி நேரங்கள் கழித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பாபுல்  புயல் குறித்த அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து மட்டுமே அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.