லக்னோ
அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வரும் சர்ச்சைக்குரிய நில உரிமை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு அத்ற்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்டிக் கொள்ள வழங்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்துப் பல அரசியல் தலைவர்கள் கருத்து கூறி உள்ளனர்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாயந்த் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு மதச்சார்பின்மையை வலுப்படுத்த, சட்ட உரிமை மற்றும் ஜனநாயகத்தை நிலை நாட்ட எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவு ஆகும். இந்த தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்.
கடந்த 1986 ஆம் வருடத்தில் இருந்தே சமாஜ் வாதி கட்சி இந்த பிரச்சினை குறித்து கவனம் கொண்டுள்ளது. இந்த பிரச்சினை பேச்சு வார்த்தை அல்லது நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என நாம் சொல்லி வருகிறோம். பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண முடியாமல் போனதால் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. அனைத்து மக்களும் ஒப்புக் கொள்ளக் கூடிய இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,, “ டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட மதச்சார்பின்மை சட்டப்படி மதிப்புக்குரிய உச்சநீதிமன்றம் ஒருமனதான தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை நாம் அனைவரும் மதித்து நடக்க வேண்டும். மேலும் இதில் எவ்வித மத விவகாரங்கள் நேராத வண்ணம் பணி நடைபெற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.