சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தற்போது போதாத காலம் என்று சொல்லும் நிலைமை தான் தற்போது அரங்கேறி வருகிறது. திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, அவருக்கு காவி வர்ணம் அணிந்த ஆடை அணிவிப்பது என அவமதிப்பு பட்டியல் நீளுகிறது.
இப்போது புதிய ரூபமாக சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கிற திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்துகளில் இடம்பெற்றிருந்த திருக்குறள் இப்போது இல்லை. வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி செல்லும் பேருந்துகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
தொடர்ந்து திருவள்ளுவரையும், திருக்குறளையும் அவமதிக்கும் வகையில் செயல்கள் நடைபெறுவதை ஏற்க முடியாது என்று தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தஞ்சையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும், தமிழிஞருமான கலியபெருமாள் கூறியிருப்பதாவது: 1967ம் ஆண்டு எம்எல்ஏக்கள் விடுதியில் முதல் முதலாக திருக்குறள் எழுதி வைக்கப்பட்டன.
காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது அப்போது இருந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, திருக்குறளின் பெருமைகளை எடுத்துரைத்தார். அதன் பிறகு அரசு பேருந்துகளில் திருக்குறளை எழுதி வைக்க ஆணையிட்டார்.
ஆனால், இப்போது ஆட்சியாளர்களுக்கு நேர்மையும் இல்லை, பண்புகளும் இல்லை. சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும். ஏதேனும் ஒரு நல்ல கருத்தை கூறுவதுதான் திருக்குறள். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு திருக்குறள் இலக்கியம் அல்ல என்றார்.
விழுப்புரம் கோட்டத்தில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் 7 முதல் 10 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அவை தற்போது பழுதாகி உள்ளதால் பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அப்போது திருக்குறள் நீக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, திருக்கோவிலூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சிவநரேன் கூறி இருப்பதாவது: பேருந்துகளில் எழுதப்பட்ட திருக்குறள் பலகைகள் நீக்கப்பட்டு அந்த இடத்தில் தனியார் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
திருக்குறள் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஸ்டிக்கரின் விலை 50 ஆக தான் இருக்கும். ஆனால், அதற்கு கூட முயற்சி எடுக்காமல் அதிகாரிகள் இருக்கின்றனர். சில பேருந்துகளை தவிர, சென்னையில் இருந்து திருவண்ணாமலை, செஞ்சி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் நீக்கப்பட்டுள்ளது என்றார்.
பொதுமக்கள், தமிழறிஞர்கள் குற்றச்சாட்டுகளை போக்குவரத்து நிர்வாகம் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. இது குறித்து, விழுப்புரம் கோட்டத்தின் டிஎன்எஸ்டிசி நிர்வாக இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், திருக்குறள் ஸ்டிக்கர்கள் எந்த பேருந்துகளில் இருந்தும் நீக்கப்படவில்லை என்றார்.