மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், இன்று இரவுக்குள் ஆட்சி அமைக்கப்பட வேண்டிய நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி பிடிவாதம் காரணமாக, அங்கு பாஜக உள்பட எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் சட்டமன்றம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக  இன்று மாலை தனது அமைச்சரவை சகாக்களுடன் கவர்னர் மாளிகை சென்று, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி (Bhagat Singh Koshyari)யை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஆனால், ஆட்சி அமைப்பது தொடர்பாக கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.

அதைத்பெற்றுக்கொண்ட கவர்னர், சிறிது நேரத்தில், அவரது ராஜினாமா ஏற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுடகாலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை பெறவில்லை. இதனால், தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், இரு கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஆட்சிக்கு உரிமைக்கோர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், சிவசேனாவின் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்துவிட்ட நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தர சிவசேனா மறுத்து விட்டது. இதனால்  பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதற்கிடையில், சிவசேனா தரப்பில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரப்பட்ட நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து விட்டன. இதனால் சிவசேனாவும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை, எந்தவொரு கட்சியும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், சட்டமன்றம் முடக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.