சென்னை:

பிரபல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.

ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான சென்னை, கன்னியாகுமரி உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டட இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ஜேப்பியார் கல்வி குழும அதிகாரிகள், உறவினர்களின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றவர்  ஜேப்பியார்.  எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கி கல்வி நிறுவனங்களில் கவனம் செலுத்தினார். 1988ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவியவர் தொடர்ந்து ஏராளமான கல்லூரிகளை நிறுவி, கல்வித்தந்தை என்று புகழ் பெற்றார்.

இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகார் காரணமாக, ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள், நிர்வாகிகளின், எழும்பூர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள, வீடுகள் போன்ற இடங்கள் என சென்னையில் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருகிறது.