புதுச்சேரி:
மாநிலத்துக்கு தொழில்வளத்தை பெருக்கும் நோக்கில் முதல்வர் நாராயணசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் புதுவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, ஏற்கனவே, மாநிலத்தில் தொழில்வளத்தை பெருக்கும் நோக்கில் புதிய தொழிற்கொள்கையை அறிவித்து, வெளிநாட்டு தொழில்நிறுவனங்களை தொழில் தொடங்க வரும்படி அழைப்பு விடுத்தது.
அதையடுத்து, தொழில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது அதில், பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட தொழில் அதிபர்கள் கலந்துகொண்டனர். அப்போது, மாநில அரசு சார்பில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதிக்காத, ரசாயனம் அல்லாத தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தொழில்அதிபர்களை அழைக்கும் வகையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் குழுவினர் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
அங்கு சிங்கப்பூர்- இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர்கள் கலந்துகொண்டு புதுவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாடு, மாசில்லா தொழிற்சாலைகள், கடற்கரை மேம்பாடு என பல்வேறு தொழில்களில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக முக்கிய தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.