காஞ்சிபுரம்:
பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினை காரணமாக, ஐயங்கார் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று பிரபந்தம் பாடுவது சம்பந்தமாக ஐயங்காரின் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆச்சார்யர் வேதாந்த தேசிகரின் பிரபந்தம் பாடப்படுவதில், அங்குள்ள ஐயர், ஐயங்கார்களிடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்ட்ட வழக்கில், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை, கோவிலில் தமிழில் பிரபந்தம் பாட தடை விதிப்பதாக கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் 20ந்தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டு அங்கு சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர். இதற்கு வடகலை பிரிவைச் சேர்ந்த அய்யங்கார்கள் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்படும் கைகலப்பு சூழல் உருவானது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், கோவில் அதிகாரிகள் விரைந்து வந்து, இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஐயர்களின் மோதல் போக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே, வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, வேடுபறி வைபவம் நடந்தபோது, தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயன்றனர். அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு கைகலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.