மும்பை:
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை பாஜக சிவசேனாகூட்டணி இணைந்து சந்தித்து வெற்றி பெற்றுள்ள நிலை யில், ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகள் இடையே அதிகாரப்பகிர்வு காரணமாக இழுபறி நீடித்து வருகிறது.
இதுவரை தங்களுக்கும் முதல்வர் பதவி வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி வந்த சிவசேனா, தற்போது, தங்களிடம் ஆட்சி அமைப்பது தொடர்பாக புதிய திட்டம் ஏதும் இல்லை என்று பணிந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி நாங்கள் போட்டியிட்டோம் என்று தெரிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பாஜக ஆட்சி அமைக்க கடுமையான நெருக்கடிகளை கொடுத்து வந்த சிவசேனா தற்போது, சற்று இறங்கி வந்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சி கூட்டணி வெற்றி பெற்றும், சிவசேனாவின் 50க்கு 50 ஃபார்முலா காரணமாக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இதற்கு பாஜக ஒத்துக்கொள்ளாத நிலையில், மாற்றுக்கட்சித் தலைவர்களை சிவசேனா தலைவர் சஞ்சய் ரவூத் சந்தித்து, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆனால், சிவசேனாவின் இந்த முடிவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், சில சுயேச்சைகள் உள்பட பல சிவசேனா எம்எல் ஏக்கள் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால், பதவி ஏற்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித் அமராவதி மாவட்ட சுயேச்சை உறுப்பினர் ரவி ராணா பாஜகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், சிவசேனாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார். “பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிவசேனா கட்சிக்கு 56 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. அக்கட்சி தனியாக போட்டியிட்டால் 25 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று அதிரடியாக கூறியவர், ஏற்கனவே 25 சிவசேனா உறுப்பினர்கள் தேவேந்திர பட்நாவிஸ் உடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் சிவசேனாவை உடைத்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். மேலும், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய , சஞ்சய் ரவுத், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக புதிய திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சியினர் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்று கனவில் மிதந்த சிவசேனாவுக்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தர மறுத்து விட்ட நிலையில், தற்போது, தங்களிடம் புதிய திட்டம் எதுவும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு திட்டம் இருந்தது, அந்த அடிப்படையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் என்று நழுவலாக பதில் தெரிவித்து உள்ளார்.
இதன் காரணமாக பாஜக சிவசேனா உடையே உள்ள மோதல் விரைவில் சரியாகி, கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.