இஸ்லாமாபாத்: சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க, கர்தார்பூர் ஸ்தலம் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் பிறந்தநாள் வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கர்தார்பூரில்தான் குருநானக் தனது கடைசி காலத்தைக் கழித்ததாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் 12ம் தேதி அவருடைய 550ம் பிறந்தநாள் ஆகும்.
சீக்கியர்களைப் பொறுத்தவரை, கர்தார்பூருக்குச் சென்று வழிபடுவது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலிருந்து, கர்தார்பூருக்கு பாதை அமைக்கும் பணிகள் நடந்துவந்தன.
பாகிஸ்தான் தரப்பிலும் உள்கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க, கர்தார்பூர் தயாராக உள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தள்ளார் இம்ரான்கான்.
வரும் 9ம் தேதி கர்தார்பூர் சிறப்புப் பாதை திறக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் செய்துமுடித்த தனது அரசின் அதிகாரிகளை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தயார் நிலையில் உள்ள கர்தார்பூர் ஸ்தலத்தின் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.