டெல்லி: காற்று மாசால், டெல்லியில் வரும் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட அதே வேளையில் 32 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டு இருக்கின்றன.
தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு நிலவி வருகிறது. மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டி இருப்பதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா பகுதிகளில் கோதுமை அறுவடைக்கு பின், வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுகிறது. அதனால் கடும் புகைமூட்டம் பரவி, காற்றின் மாசு அதிகரித்து, சுவாசிக்க முடியாத அளவுக்கு உள்ளது.
அதன் காரணமாக, தலைநகர் டெல்லியில் கல்வி நிலையங்களுக்கு வரும் 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நிலைமை மேலும் மோசமான நிலைக்கு எட்டியிருக்கிறது.
கடும் மாசு குறைபாட்டால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். விடுமுறை தினமான இன்று, காற்றின் தரக்குறியீடு 483 ஆக உள்ளது. இது மிக மோசமான குறியீடாகும்.
இது மேலும் அதிகரித்து 500ஐ எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையே நாளையும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடும் காற்று மாசுபாட்டால், டெல்லியில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் கூறி இருப்பதாவது: டெல்லியில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. அதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கு 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டு இருக்கின்றன என்று கூறியுள்ளது.