புதுடெல்லி: இந்திய விமானப் படையில் முக்கிய இடம்பெற்றிருந்த மிக் 27 ரகப் போர் விமானங்களுக்கு, இந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் ஓய்வுகொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 1981ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது மிக் 27 ரக போர் விமானம். கடந்த 1999ம் ஆண்டு வாஜ்பாயின் காலத்தில் நடைபெற்ற கார்கில் போரின்போது, இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு இந்த விமானம் முக்கியப் பங்காற்றியது.

கிட்டத்தட்ட கடந்த 38 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வந்தது இந்த விமான வகை. ஆனால், இந்த விமானங்கள் காலத்திற்கேற்றபடி நவீனமாக இல்லை என்ற விமர்சனங்களும் அதிகம் எழுந்து வருகின்றன.

இவைகளால் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானங்களை சமாளிக்க முடியாது என்ற கருத்துகளும் உண்டு. இந்நிலையில்தான், இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள விமானப்படை பிரிவுகளில் பணியாற்றும் மிக் 27 ரக விமானங்களுக்கு ஓய்வுகொடுக்க முடிவெடுக்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் அவை முழுமையாக பணியிலிருந்து அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் மேற்குவங்கப் பிராந்தியத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பிராந்தியத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்படவுள்ளது.