சென்னை: பலருக்கு நிம்மதியளிக்கும் ஒரு விஷயமாக, கனரக வாகன(ஹெவி) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, கல்வித்தகுதி தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மத்திய அரசின் சட்டப்படி, குறைந்தபட்சம் 8ம் வகுப்பை முடித்தவர்கள்தான், கனரக வாகன டிரைவிங் லைசன்ஸ் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ள இன்றைய நாட்களில், ஓட்டுநர் பற்றாக்குறை அதிகம் நிலவுகிறது.
அந்த வேலையைப் பார்க்க பலரும் முன்வராத காரணத்தால், 8ம் வகுப்பைத் தொடாத நபர்களை வைத்தே தேவையை சமாளிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விதிமுறையில் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தில், இந்த சிக்கலான அறிவிப்பை நீக்கி உத்தரவு வெளியிடப்பட்டது. இதை சம்பந்தப்பட்டவர்கள் வரவேற்றனர்.
இதன்விளைவாக, தமிழக போக்குவரத்து கமிஷனர் சத்தியமூர்த்தி, கனரக வாகன ஓட்டுநர் உரிம விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழைக் கேட்க வேண்டாமென உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பொதுமக்கள் விபரம் அறிய வேண்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில், அறிவிப்பு விபரத்தை ஒட்டி வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.