டில்லி

பி எஸ் என் எல் நிறுவனத்தில் இருந்து 80000 ஊழியர்களை நீக்கி ரூ.7500 கோடி சேமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனம் தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  கடந்த 2017-18 ஆம் வருடம் ரூ.7993 கோடி நஷ்டத்தில் இருந்த இந்நிறுவனம் 2018-19 ஆம் வருடம் ரூ.14202 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது.   இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதியத்துக்காக ரூ.14,155 கோடி செலவிடப்படுகிறது.

எனவே இந்த செலவைக் குறைக்க ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திடம் ஒன்றை அரசு அறிவிக்க உள்ளது.   இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஊழியர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்க உள்ளது.   தற்போது பி எஸ் என் எல் நிறுவனத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.  இவர்களில் 1.05 லட்சம்  பேர் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவார்கள்

இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் சுமார் 80000 ஊழியர்களைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.   இதன் மூலம் பி எஸ் என் எல் வருடத்துக்கு சுமார் ரு.7500 கோடி அதாவது ஊதியத்தில் பாதி அளவு சேமிக்க உள்ளது.  இந்த விருப்ப ஓய்வுக்கு அளிக்கப்பட உள்ள ஊக்கத்தொகையான ரூ14800 கோடி செலவை அரசு ஏற்க உள்ளது.

இந்த  ஊக்கத்தொகையை இரு தவணைகளாக அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அதாவது 2019-20 ஆம் வருடம் முதல் தவணையும் 2020-21 முதலாம் காலாண்டில் இரண்டாம் தவணையும் அளிக்கப்பட உள்ளது.   அதே வேளையில் கிராசுவிடி எனப்படும் பணிக்கொடை தொகை 60 வயதை அடைந்த பிறகு அளிக்கப்பட உள்ளது.   அதற்குள் மரணமடைந்தால் அந்த தொகை உடனடியாக குடும்பத்தினருக்கு அளிக்கப்பட உள்ளது.