டில்லி
கருப்புப் பணத்தை பிடிக்க அளவுக்கு அதிகமாகத் தங்கம் வைத்திருப்போர் தானே வந்து தெரிவிக்க வேண்டும் என்ற தகவல் தவறானது என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளன.
நேற்று வெளியான ஒரு செய்தியில் மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்புப் பணம் வைத்திருந்தோர் தங்கமாக மாற்றி விட்டதாகக் கூறப்பட்டது. மேலும் தங்கம் வைத்திருக்க உச்சவரம்பு கொண்டு வர உள்ளதாகவும் அதற்கு மேல் வைத்திருப்போருக்கு அதிக அளவில் வரி விதிக்க உள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அதிக வரியைத் தவிர்க்க கணக்கில் வராத தங்கம் வைத்திருப்போர் தாமாக வந்து தகவலைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு தெரிவித்திருப்போருக்கு அதிக வரி விதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்தன
இந்நிலையில் அரசு தரப்பில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கணக்கில் வராத தங்கத்தை வைத்திருப்போர் தாமாக வந்து தகவல்கள் அளிக்க வேண்டும் என்னும் திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை என இந்த புதிய தகவலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.