நெட்டிசன்:

Journalist Selva முகநூல் பதிவு

அவர்தான் அன்னை இந்திரா!

முகவுரை எழுதுகிறபோதே
முடிவுரை எழுதுகிற
ஒருவன் உண்டு…
அவனுக்கு பெயர்தான் இறைவன்!

தாயின் கருவறையில் நாம்
கருவாக உதித்தபோதே
நமக்கு மரணம் இந்த நாளில்
இன்ன விதமாய் சம்பவிக்கும் என்பதை
அவன் எழுதி வைத்திருக்கிறான் ரகசியமாய்…
அந்த ரகசிய முடிச்சை மட்டும் அவன் அவிழ்த்திருந்தால்
வாழ்க்கை சுவாரசியமாக இருந்திருக்க முடியாது!

இந்த பூமிப்பந்தில்
தங்கள் மரணத்தை முன்கூட்டி
கணித்து சொன்னவர்கள் உண்டா…
இந்த சமூகத்துக்கு
தீர்க்கதரிசனமாய் உணர்த்தியவர்கள் உண்டா?

உண்டு..
ஆனால் அவர்கள்
என்னையும் உங்களையும் போல
சாமானியர்கள் அல்ல….

ஏசுபிரான்-
எனது சீடர்களில் ஒருவராலே
நான் காட்டிக்கொடுக்கப்படுவேன்
என்னை சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என
முன்கூட்டியே திருவாய் மலர்ந்து மொழிந்தது உண்டு…

அய்யா நாராயணர்
இன்ன நாளில் நான் மரணம் அடைவேன் என
முன்கூட்டியே கணித்து உரைத்ததும் உண்டு…

அன்னை இந்திராவும் அப்படித்தான்…
இதே நாளில்-
35 ஆண்டுகளுக்கு முன்னர்
தனது இல்லத்தில் தனது மெய்க்காவலர்களான
சத்வந்த்சிங், பீந்த் சிங்கால்
சுட்டுக்கொல்லப்பட்டார்…
மெய்க்காவலர்களே
பொய்க்காவலர்களான
வரலாற்று கறை அது!

அதற்கு முந்தைய நாளில்,
1984 அக்டோபர் 30-ந் தேதி
இன்றைய ஒடிசா மாநிலத்தின்
தலைநகரான புவனேசுவரத்தில் நடந்த
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது
அன்னை இந்திரா சொன்னார் இப்படி…

I shall continue to serve until my last breath and when I die, I can say that every drop of my blood will invigorate India and strengthen it!

எனது கடைசி சுவாசம் இருக்கும்வரை
நாட்டுக்காய் நான் உழைப்பேன்..
நான் மரணத்தை தழுவும்போது
என் ஒவ்வொரு துளி ரத்தமும்
இந்தியாவுக்கு ஊக்கம் அளிக்கும்
பலப்படுத்தும் என்று
என்னால் கூற முடியும்…

இப்படி சொன்னவர் மறுநாளில்
அப்படியே இன்னுயிர் ஈந்தார்….

அதனால்தானோ என்னவோ
ஒரு கவிஞர் மூன்றே வார்த்தையில்
கவிதை எழுதினார் இப்படி
“இந்திரா
காந்தி
ஆனார்!””

இன்று அன்னை இந்திரா
நினைவு நாள்…
இதயத்தில் இனம் புரியாத
சோகம் மவுன ஊர்வலம் நடத்துகிறது!

இந்திரா சர்வாதிகாரி…
நெருக்கடி நிலையை கொண்டு வந்தார் என்றாலும்
விமர்சனங்கள் வந்தபோதும்
அதற்கான காரணத்தை அவர் பின்நாளில்
ஒரே வாக்கியத்தில் சொல்லத்தவறவில்லை..

I was with a bundle of idiots at that time!

நான் ஒரு முட்டாள் கூட்டத்தோடு அன்னாளில் இருந்தேன் என்று
அவர் சொன்னதை என்னால் நிராகரிக்க முடியவில்லை!

எதிர்மறை விமர்சனங்களால் பழக்கப்பட்ட
பாழாய்ப்போன இந்த பூமியில்
அவரது தியாகத்தை யாரும் திரை போட்டு
மறைக்க நினைத்தால்
அது சூரியனை உள்ளங்கைகளால்
மறைக்க முயற்சிக்கும்
பேதைமை அன்றி வேறல்ல…

அன்னை இந்திராவே..
வாழ்க நீ எம்மான்!