ண்டன்

பிரிட்டனைச் சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனம் தங்கள் முகத்தைப் போல் ரோபோவை வடிவமைக்க அனுமதிப்போருக்கு 100,000 பவுண்ட் கட்டணம் அளிக்க உள்ளது.

தற்போது உலகெங்கும் ரோபோ மயம் ஆகி வருகிறது.  இந்த ரோபோக்கள் மிகவும் இயந்திரத்தனமாக உள்ளன.  இதை மாற்றி அமைப்பது குறித்துப் பல திரைப்படங்களில் கதைகள் வந்துள்ளன.  ரஜினிகாந்த் நடித்து வெளி வந்த எந்திரன் மற்றும் 2.0 ஆகிய படங்களில் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் ரோபோக்களாக நடித்துள்ளனர்.   இவ்வாறு முகம் அமைப்பதன் மூலம் ரோபோக்களுக்கு ஒரு மனித வடிவம் கிடைக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜியோமிக் என்னும் ரோபோ தயாரிக்கும் நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து மனிதர்களுக்கு உதவும் ரோபோக்களை தயாரிக்க உள்ளது.   இந்த ரோபோக்கள் வயதானவர்களைக் கவனித்துக் கொள்ளத் தயாரிக்கப்பட உள்ளது. எனவே நிறுவனம் ஒரு பரிச்சயமான அல்லது நட்பு உணர்வுடன் கூடிய முக அமைப்பு இந்த ரோபோக்களுக்குத் தேவை என அறிவித்துள்ளது.

வரும் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்க உள்ள இந்த ரோபோக்களுக்கான முகத்தைத் தேர்வு செய்து அதே போன்ற முகத்தை அச்சு அசலாக உருவாக்கிப் பொருத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இதற்காக முன் வருவோருக்கு இந்நிறுவனம் 100,000 பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.92 லட்சம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த பணம் பலரைக் கவர்ந்தாலும் வேறு சில பிரச்சினைகளும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  தற்போது பாலியல் செயல்களுக்கான ரோபோக்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.  தங்கள் முக அமைப்பு அந்த நிறுவனங்களிடம் கிடைத்தால் அச்சு அசலாக இதே முகத்துடன் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு பாலியல் செயல்களுக்குப் பயன்படுத்தலாம் எனப் பலரும் அஞ்சுகின்றனர்.

இந்தியா போன்ற நாட்டில் வசிக்கும் நம்மில் எத்தனை பேர் இந்த நிறுவனத்துக்கு நமது முகத்தைக் கொடுப்போம் என்பது சந்தேகமான விஷயம் ஆகும்.