சென்னை

மிழகத்தில் உள்ள உள்ள பெண் கொத்தடிமை தொழிலாளர்களில் 60% பேர் மருத்துவமனை செல்லாமல் பணி புரியும் இடங்களிலேயே குழந்தை பெறுகின்றனர்.

தமிழகத்தில் பல இடங்களில் இன்னும் கொத்தடிமை தொழிலாளர் முறை இருந்து வருகிறது.  கடந்த 2018ஆம் வருடம் வரை இவர்களில்  65000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 10000 பேர் மணமான பெண்கள் ஆவார்கள்.   இவர்கள் அனைவரும் கணவருடன் வசித்து வந்தவர்கள் ஆவார்கள்.   இந்த தொழிலாளர்களில் கடின உழைப்புடன் பலவித கட்டுப்பாடுகளுக்கிடையில் வாழ்ந்து வருகின்றனர்.  சரியான உணவு மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

குறிப்பாக பெண்கள் கருவுற்றிருக்கும் போது கூட இவர்களை மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்புவது கிடையாது.   மீட்கப்பட்ட பெண்களிடம் நடந்த விசாரணையில் அவர்களில் சுமார் 40% பெண்கள் மட்டுமே தங்கள் மகப்பேற்றுக்காக ஆரம்பச் சுகாதார நிலையம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மீதமுள்ளோரில் பலர் பணி புரியும் இடங்களில் பிள்ளை பெற்றுள்ளனர்.

இது குறித்து சித்ரா என்னும் பெண், “நான் பணிபுரியும் இடத்துக்கு மிக அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் கர்ப்பிணியான என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.   நான் கரும்பு பண்டல்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு இருந்த போது எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது.  அப்போதும் என்னை மருத்துவமனை செல்ல அனுமதிக்காமல் என் உடல் நிலை தேற அவர்களே டானிக் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட பெண்களில் 269 பேர் கர்ப்பம் தரித்த பெண்களாக இருந்துள்ளனர்.  அவர்களுக்கு மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது.  கவுரி என்னும் 6 பெண் குழந்தைகளின் தாய், “நான் கர்ப்பமாக இருந்த போது என்னை மருத்துவமனை செல்ல அனுமதிக்கவில்லை.  நான் பணி புரியும் இடத்தில் தார்ப்பாய்கள் மற்றும் அரிசி மூட்டைகள் மறைவில் எனது மாமியார் உதவியுடன் குழந்தைகளைப் பெற்றேன்.  என்னைப் போலப் பலர் இன்னும் கொத்தடிமைகளாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைச்சாமி, “இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.  இவர்களில் 63% பெண்களுக்கு மூன்று வேளை உணவு கூட அளிக்கப்படவில்லை.  இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது பெண்களுக்கான அடிப்படை உரிமை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.