சென்னை:

ல்லாம் தெரிந்த விஞ்ஞானி போன்று, அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.

திருச்சிமணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுஜித் என்ற சிறுவன் ஆழ்துறை கிணற்றில் விழுந்தான். 5 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு சிறுவன் சுஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

குழந்தை சுஜித்தின் வீட்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி, சிறுவனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். உடன் சென்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி  செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்தவுடன் அதுபற்றிய தகவல் அறிந்து, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் மீட்பு பணியில் துரிதமுடன் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், அதிகாரிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும், தனியார் நிறுவனத்தினரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  என்டிஆர்எப், எஸ்டிஆர்எப் ஆகியோரை கொண்டும் முயற்சித்தோம். எனினும் அது பலனளிக்கவில்லை.

அரசின் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால், குழந்தையை மீட்க முடிய வில்லை என்று தவறான தகவலை மு.க. ஸ்டாலின் கூறி சென்றிருக்கிறார்.எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எந்த அளவுக்கு அரசு செயல்பட்டது என்பதை ஊடகங்கள் அறியும். வதந்தியை பரப்பி, மக்களிடையே தவறான எண்ணம் ஏற்படுவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்கிறார்.

இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்னர் மீட்பு பணிகள் நடைபெற்றது இல்லை.  மீட்பு பணிகள் குறித்த ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை.

2009ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தேனியில் 6 வயது சிறுவன் இதுபோன்ற ஒரு நிகழ்வில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டான். அப்போது இந்த அளவிற்கு மீட்பு பணிகள் நடக்கவில்லை. தேனி நிகழ்வின் போது ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா? அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டிருந்தார்களா?

 

எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் செயல்படுகிறார் என்றார்.