இந்தியாவைப் போன்ற நாடுகளில் வாரிசு அரசியல் பூஜிக்கப்படும் ஒன்றுதான். பல தலைமுறைகளாக நாட்டை ஆண்ட குடும்பங்களும் இங்கு உண்டு.
சில குடும்பங்களில், அக்குடும்பத்தின் பல உறுப்பினர்கள் கட்சிப் பதவிகளில் இருப்பார்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். ஆனால், சில குடும்பங்களில் பலபேர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஹரியானா சட்டசபைத் தேர்தல் முடிவில், முன்னாள் துணைப் பிரதமர் தேவிலால் சவுதாலாவின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்தோம்.
தற்போது அதைப்போன்றே, மராட்டிய மாநிலத்தில் ஒரு குடும்பத்தின் 5 பேர் சட்டசபை மற்றும் நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களாக உள்ளனர். அது வேறுயாருமல்ல, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் குடும்பம்தான் அது.
சரத்பவார் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அவரின் மகள் சுப்ரியா சுலே மக்களவை உறுப்பினராக உள்ளார். உறவினர் அஜித் பவார் தொடர்ந்து 7வது முறையாக மராட்டிய சட்டசபைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சரத்பவாரின் பேரன் ரோகித் பவாரும் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவாரின் இன்னொரு உறவினர் ராணா ஜக்திசிங் பாட்டீலுக்கும் மக்கள் சட்டசபையில் இடமளித்துள்ளனர்.
ஆக, ஒரு குடும்பத்தின் 5 நபர்கள் மக்கள் மன்றங்களில் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் சமூக நோக்கர்கள்.