டில்லி
காஷ்மீருக்கு வரும் ஐரோப்பியப் பாராளுமன்றக் குழுவினர் அதிகாரபூர்வ குழுவினர் இல்லை என பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்டன. அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் மட்டும் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
காஷ்மீரைப் பார்வையிட 28 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றக் குழு வந்துள்ளது. அந்த குழு இன்று காஷ்மீரைப் பார்வையிட உள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான சுப்ரமணியன் சாமி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனிப்பட்ட முறையில் ஒரு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றக் குழுவின் காஷ்மீர் வருகையை அமைத்ததால் ஆச்சரியம் அடைந்துள்ளேன். இந்தக் குழு ஐரோப்பிய யூனியனின் அதிகாரபூர்வ குழு இல்லை. இது நமது தேசிய கொள்கைக்கு எதிரானது ஆகும். இந்த செய்கை ஒழுக்கக்கேடானது என்பதால் அரசு இந்த வருகையை ரத்து செய்ய வேண்டும்” என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.