மும்பை: 50:50 என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், மராட்டியத்தில் அரசமைப்பதற்கான மாற்றுவழிகள் குறித்து தேடும் நிலைக்கு எங்களை பாரதீய ஜனதா தள்ளிவிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா கட்சி.
இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பவர் அக்கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்.
“நாங்கள் பாரதீய ஜனதாவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரே தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், அரசு அமைப்பதற்கான மாற்றுவழிகளை நோக்கி செல்லுமாறு எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என்றுள்ளார் சஞ்சய் ராவத்.
தேர்தலுக்கு முன்னர் போடப்பட்ட 50:50 என்ற உடன்பாட்டை பாரதீய ஜனதா மதிக்க வேண்டும். மந்த்ராலயாவில்(மராட்டிய சட்டசபை) உங்களால் தீயை உண்டாக்க முடியும்; ஊழல் கோப்புகளை அழிக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தீயை உண்டாக்கியதுபோல். ஆனால், இரண்டு கட்சிகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை எப்படி நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
இரண்டு கட்சிகளின் சார்பிலும் தனித்தனியே மராட்டிய ஆளுநரை சந்தித்தாலும், அதை இரண்டு கட்சிகளும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறியுள்ளன. இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. தான் வெற்றிபெற்றதில், பாதியளவே வென்ற சிவசேனாவுக்கு சமமான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க பா.ஜ. மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.