டெல்லி: காமெடி சர்க்கஸ் செய்யாமல், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியை பாருங்கள், அதுதான் உங்களின் வேலை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பாஜகவை காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.
பொருளாதாரத் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசை வென்றவர் அபிஜித் பானர்ஜி. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
அவரது இந்த கருத்து பெரும் விவாதத்தை எழுப்பியது. ஆனால், அந்த விமர்சனத்தை புறந்தள்ளிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அபிஜித் ஒரு இடதுசாரி சிந்தனையாளர், அவர் அப்படித்தான் கூறுவார், அந்த சிந்தனைகளை ஏற்க மாட்டோம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, நாட்டின் பொருளாதார நிலைமையையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பாஜக தலைவர்கள் அவர்களின் கடமைகளை, பணிகளை செய்வதற்கு பதிலாக, மற்றவர்களின் சாதனைகளை மறுப்பதில்தான் கவனத்தை செலுத்துகின்றனர். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர் தமது பணியை நேர்மையாக செய்திருக்கிறார்.
ஆனால், நாட்டிலோ பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்து வருகிறது. அதை மேம்படுத்துவதுதான் உங்கள் பணி. மாறாக காமெடி சர்க்கஸ் நடத்துவது அல்ல என்று கூறியிருக்கிறார்.