சென்னை: கியார் புயல் எச்சரிக்கையை அடுத்த, தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்துள்ளது. அந்த புயலுக்கு கியார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயல், அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக,கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்ற நிலையிலும், தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: அரபிக்கடலில் தற்போது தமிழக மீனவர்களின் 770 படகுகள் மீன்பிடிக்க சென்றிருக்கின்றன. புயல் குறித்து சாட்டிலைட் போன் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மொத்தமுள்ள 770 படகுகளில், 478 படகுகள் கரை திரும்பி விட்டன. எஞ்சிய 292 படகுகளும் கரை திரும்பி விடும் என்று எதிர்பார்க்கிறோம். அனைத்து படகுகளுக்கும் எச்சரிக்கை அனுப்பி இருக்கிறோம்.
தமிழகம் மட்டுல்லாது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலங்களை சேர்ந்த படகுகள் அவற்றில் இருக்கின்றன. ஓரிரு நாட்களில் அந்த படகுகள் பாதுகாப்பாக கரைக்கு வந்து சேரும். ஒவ்வொரு படகிலும் 9 முதல் 12 மீனவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மீனவர்கள் கரை திரும்பும் விவகாரத்தில் எவ்வித பீதியும் அடைய வேண்டும. கரை திரும்பும் மீனவர்கள் அனைவருக்கும் போதிய, அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறியிருக்கின்றனர்.