கோலாலம்பூர்
மலேசியா – இந்தியா பாமாயில் விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விலக்கிச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசமாகப் பிரித்தது. அத்துடன் எதிர்ப்பாளர்களை அடக்க மாநிலம் எங்கும் தொலைப்பேசி மற்றும் இணையத்தடை உள்ளிட்ட பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
காஷ்மீரின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பிய பாகிஸ்தான் இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. ஐநா பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல அமைப்புகளிலும் பல நாடுகளிலும் பாகிஸ்தான் புகார் அளித்தது. இஸ்லாமிய நாடான துருக்கி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஐநா சபை பொதுக்குழுவில் மலேசியப் பிரதமர் மகாதிர் இந்தியா படை எடுத்து காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதாகவும் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் பேசினார். இதற்கு இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடெங்கும் மலேசியாவுக்கு எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு அதிக அளவில் சமையல் எண்ணெயான பாமாயில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அதைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் தனது உறுப்பினர்களை மலேசியப் பாமாயில் வாங்குவதைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.
இதனால் தற்போது மலேசியாவுக்குப் பதில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, “இந்தியாவில் இருந்து குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் மலேசியாவில் சென்று பணியாற்றி வருகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பம் மற்றும் உணவு விடுதிகளில் மட்டும் 5 லட்சம் தமிழர்கள் பணி புரிகின்றனர்..
அவர்கள் ஈட்டும் ஊதியத்தில் 90% அளவுக்கு இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே தற்போது பாமாயில் இறக்குமதியைக் குறைப்பது மலேசியாவின் வருவாயை மட்டுமின்றி அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். எனவே மலேசிய பாமாயில் இறக்குமதியைக் குறைக்க வேண்டாம் எனப் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.