சென்னை: 9 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்த புகாரில், தனியார் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடியை அடுத்த சாயர்புரம் பகுதியில் டாக்டர் செல்வகுமாரி என்பவர், செல்வா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்ட சுகாதார சேவைகள் துணை இயக்குநர் கீதா ராணி திடீரென ஆய்வு நடத்தினார்.
அந்த சமயத்தில் 9 வயது கொண்ட சிறுவன் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்திருக்கிறார். அப்போது, அவருக்கு ஊக்க மருந்து ஊசி ஒன்றை டாக்டர் செல்வகுமாரி போட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில மாத்திரைகளையும் 3 நாட்களுக்கு சாப்பிடுமாறும் பரிந்துரைத்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு டாக்டர் கீதா ராணி அறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்த அறிக்கையை பரிசீலித்த பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து, டாக்டர் குழந்தைசாமி கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்லூரிகளில் கூட, நாங்கள் மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சலுக்கு ஊசி போட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். உடல் ரீதியாக அதில் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கில் இவ்வாறு கூறி இருக்கிறோம்.
இந்த 9 வயது சிறுவன் போன்று மற்றொருவருக்கும் இதே ரீதியில் அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விவரங்களும் புகாரில் விவரமாக இணைக்கப்பட்டுள்ளன என்றார்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் சேர்மன் டாக்டர் செந்தில் கூயிருப்பதாவது: எங்களுக்கு புகாரின் நகல் வந்திருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அந்த டாக்டரிடம் இமெயில் மூலம் விளக்கம் அளிக்க கேட்டிருக்கிறோம். வரும் 31ம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகுமாறும் டாக்டர் செல்வகுமாரிக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்றார்.
[youtube-feed feed=1]