டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ள நிலையில், அந்த வழக்கில்  ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான புகாரில்  சிபிஐ கைது செய்த வழக்கில் உச்சநீதி மன்றம் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உள்ள நிலையில், தற்போது  அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்,  சட்டவிரோதப் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள்  கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் மறுத்ததைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியது.

இதற்கிடையில், அதே வழக்கில், அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது காவல் நாளையுடன்(அக்.24) முடிவடைகிறது. அதையடுத்து சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்படுவார்.

இந்த நிலையில், தனக்கு அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில்,  தன்னை களங்கப்படுத்துவதற்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றும் தன்னை சிறையிலேயே வைத்து பழிவாங்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.