சென்னை:

‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்ற மனுதரும கோட்பாட்டின் மறுவடிவம் புதிய கல்விக் கொள்கை என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு என்று மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது,

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திட அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகளுக்கு நாடு முழுவதும் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை பற்றிய ஆழமான கருத்து வேறுபாடுகள் தொடரும் நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் செயலில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கி உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட இருப்பதாகவும், அதில் பல்கலைக் கழகம், கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டு வர செய்யப்பட்டுள்ள பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிரங்கன் குழு அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில், “முன் மழலை வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி, உயர் ஆய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் ‘தேசிய கல்வி ஆணையம் (National Education Commission)’ எனும் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். இதற்கு பிரதமர் தலைவராகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிப்பார்கள். நாட்டின் அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை தொடர்பான அனைத்தையும் தேசிய கல்வி ஆணையம்தான் முடிவு செய்யும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதல்வர்கள் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் அமைக்கப்படும். ஆனால் அவற்றுக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை. தேசிய கல்வி ஆணையம் எடுக்கும் முடிவுகளை மட்டும மாநிலக் கல்வி ஆணையம் செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கல்வித்துறை பொது அதிகாரப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசு முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவும், ஏதேச்சாதிகாரமான முடிவுகளைக் கல்வித்துறையில் திணிக்கவும், அதன் மூலம் பள்ளிக் கல்வி அளவில்கூட மாநில அரசுகள் எந்த முடிவுகளையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஆதிக்கம் செலுத்தவும் புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கிறது.

மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் அனைத்திற்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இனி பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளுக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதனை தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) எனும் அமைப்பு நடத்தும் என்று தேசியக் கல்விக் கொள்கை -2019 வரைவு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

ஏழை எளிய பின்தங்கிய மற்றும் பட்டியல் இன மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளில் பட்டம் பெறுவதைக் கூட இந்த பொது நுழைவுத் தேர்வு தடை செய்துவிடும். எதைக் கொடுத்தாலும் ‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்னும் மனுதருமக் கோட்பாட்டை ‘புதிய கல்விக்கொள்கை’ வலியுறுத்துவதும், அதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்த நினைப்பதும் ஏற்கவே முடியாத சமூக அநீதியாகும். இது கடும் கண்டனத்துக்கு உரியது.

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து, அனைத்தையும் மத்திய அரசின் ஒரு குடையின் கீழ் கொண்டுவர பா.ஜ.க. அரசு “ஒரே நாடு; ஒரே கல்விக் கொள்கை” எனும் மோசமானத் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துத் தவிடுபொடி ஆக்கிவிட்டு, இந்துத்துவ இந்து ராஷ்டிர கனவை நடைமுறைப்படுத்த பா.ஜ.க.வும், சங் பரிவாரங்களும் முனைந்திருப்பது மிகப்பெரும் எதிர்விளைவுகளை உருவாக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ அதில் கூறி உள்ளார்.