ஜெயலலிதா மரணம் குறித்து பேசினாலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது என்றும், அவர் மரணத்திற்கு தான் காரணமெனில் வழக்கு தொடரும் படியும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின், “2015ம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், தங்கள் தலைமையில் ஒரு குழுவோடு மிகப்பெரிய ஊழல் பட்டியலை தயார் செய்து அப்போதைய ஆளுநர் ரோசய்யாவிடம் கொடுத்தனர். அதில் 18 ஊழல்களை வரிசைப்படுத்தி சொல்லியிருந்தனர். ஆளுநரிடம் ஊழல் பட்டியல் கொடுத்த பாமகவுடன், இப்போது அதிமுக கூட்டணி வைத்தது ஏன் ?
ஜெயலலிதா மரணம் குறித்து நான் பேசியதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. அதனால் தான் இப்போது அவர் திடீரென, ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், நானுமே காரணம் என்கிறார். நான் தான் காரணமா ? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நான் தானா ? உங்களோடு இருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தான் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார். அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைத்தீர்கள். விசாரணையும் நடந்து வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 5 முறை சம்மன் அனுப்பினார்கள். அவர் ஏன் ஆஜராகவில்லை ? இதை பற்றி ஏன் நீங்க கேள்வி எழுப்பவில்லை ? இதில் மரணத்துக்கு காரணம் நாங்கள் தான் என்று எங்கள் மீது பழியை போடுகிறீர்கள். தைரியமிருந்தால், என் மேல வழக்கு தொடுத்து குற்றவாளி கூண்டில் நிறுத்துங்களேன். யார் குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறார்கள் என பார்க்கதானே போகிறோம். ஆனால் ஒன்று, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்க்கு காரணமான நபர்களை, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவோம்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் போனதற்கும் நாங்கள் தான் கரணமா ? நாங்கள் தான் வழக்கு தொடுத்தோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அபாண்டமாக பொய் பேசுகிறார். நாங்கள் தானே தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கே சென்றோம் ? உங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் யார் தெரியுமா ? ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்தவர்கள், பழிவாங்கிக் கொண்டிருப்பவர்கள். உங்களுடன் பாமக எப்படி ஒட்டி உறவாடிக்கொண்டு இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். பாமக உடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் ? பாமக உங்களுடன் கூட்டணி சேர்ந்ததால் தான், மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெல்ல இயலவில்லை.” என்று கடுமையாக சாடினார்.