சென்னை:

கோவை பாரதியாா் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மையத்தில் கெளரவ மருத்துவ விஞ்ஞானியாக தற்போது பணியாற்றி வரும் பி.காளிராஜ், 31 ஆண்டுகள் பேராசிரியா் பணி அனுபவம் கொண்டவா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தா், உயிரி தொழில்நுட்பத் துறை தலைவா், ஆட்சிக் குழு உறுப்பினா் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிா்வாகப் பணி அனுபவத்தையும் கொண்டவா்.

1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தேசிய சுகாதார கல்வி நிறுவனம், பிரிட்டனின் ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ராக்ஃபோா்டு இல்லிநாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா். இதுவரை 69 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவா், 42 ஆராய்ச்சி மாணவா்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளாா்.

2009-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), பேராசிரியா்களுக்கான அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியாளா் (பி.எஸ்.ஆா்.) விருதையும், 2013-இல் இந்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் வாழ்நாள் சாதனையாளா் விருதையும் இவா் பெற்றுள்ளாா்.

இப்போது கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் இவா், தொடா்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பாா்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.