பெங்களூரு
பிரபல யோகா ஆசிரியரும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பெங்களூரு ஐ ஐ எஸ்சி நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பிரபல யோகா ஆசிரியரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வாழும் கலை என்னும் யோகா அமைப்பினை நிறுவி உள்ளார். இந்த யோகா பயிற்சி மூலம் உடல் நலம் காப்பதுடன் மனம் மற்றும் ஆன்மாவையும் பேணிக் காக்க முடியும் என ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தெரிவித்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அவ்வகையில் பெங்களூருவில் உள்ள இந்திய விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் சார்பில் நேற்று ஒரு நிகழ்வை நடத்தினார்.
உள் மனத்தின் சிறப்பு அமைப்பு எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்வு நேற்று மாலை இந்திய விஞ்ஞான கல்வி நிலையத்தின் ஜே என் டாடா அரங்கில் நடந்தது. இதற்கு நேற்று முதல் இந்த கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வைக் கல்வி நிலையம் நடத்தவில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்துவதாகக் குறிப்பிடக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை மனுவில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்தும் இந்த பயிற்சிக்கும் மன நலனுக்கும் விஞ்ஞான ரீதியாக எவ்வித தொடர்பும் இல்லை என இருக்க இந்திய விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இத்தகைய நிகழ்வை நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த கல்வி நிலையம் பல மன நலம் குறித்த பிரச்சினைகளை ஆராய்ந்து வருவதாகவும் இந்த நிகழ்வை நிலையத்தில் நடத்துவதன் மூலம் மக்களைத் திசை திருப்ப உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு முதலில் கல்வி நிலையத்தின் இணைய தளத்தில் நிலையம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைக்குப் பிறகு அந்த அறிவிப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.