நாக்பூர்
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போதைய இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பேசி உள்ளார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பு கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. அதையொட்டி ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் நகரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவன் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் பேசி உள்ளார்.
மோகன் பகவத், “தற்போது நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நாடு வளர்ந்துக் கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் உலகப் பொருளாதாரம் தற்போது கடும் பாதிப்புக்களைச் சந்தித்து வருவதால் அதன் தாக்கம் நமது பொருளாதாரத்திலும் தென்படுகிறது.
இதை வீழ்ச்சி எனச் சொல்ல முடியாது. வளர்ச்சி வேகம் மந்தமாக உள்ளது எனக் கூறலாம். ஒரு பொருளாதார நிபுணர் வளர்ச்சி விகிதம் சைபர் எனக் கூறலாம். ஆனால் உண்மையில் நமது வளர்ச்சி விகிதம் 5% ஆக உள்ளது. அதைத் தெரிவிக்காமல் தேவையற்ற விவாதம் செய்வதால் வர்த்தகம் வளர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பலரும் நம்பி வருகின்றனர்.
அரசு இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் நமது அரசை நம்ப வேண்டும். நாம் தற்போதைய மந்த நிலையில் இருந்து முன்னேறி வருகிறோம். பல பொருளாதார நிபுணர்கள் ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைச் சுட்டிக் காட்டி பொருளாதார வளர்ச்சி குறைவு எனச் சொல்கின்றனர். உண்மையில் ஜிடிபி என்பது பொருளாதார வளர்ச்சியைத் தப்பாகக் கணக்கிடும் ஒரு அளவு கோல்” எனத் தெரிவித்துள்ளார்.