ஐதராபாத்
தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து வாடகைக் கார்களிலும் அவசர அழைப்பு வசதி பொருத்தப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் தற்போது வாடகைக்கார்களில் செல்லும் போது பயணிகளிடம் குற்றம் இழைப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பெண்களுக்குப் பலவித தொல்லைகள் ஏற்பட்டு வருகின்றன. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பல ஐடி நிறுவனங்கள் உள்ளதால் இங்கு பணி புரியும் பெண்கள் வாடகைக்காரில் தனியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அவர்களின் பாதுகாப்புக்காக தெலுங்கானா காவல்துறை புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி வாடகைக் கார் நிறுவன மொபைல் செயலியில் அவசர அழைப்பு பட்டன் ஒன்றை அமைப்பதை தெலுங்கானா மாநிலக் காவல்துறை கட்டாயமாக்கி உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நேர உள்ள நிலையில் வாடகைக் காரில் பணி புரியும் பயணி இந்த செயலியில் உள்ள அவசர அழைப்பு பட்டனை அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும் போது தெலுங்கானா காவல்துறை கண்காணிப்பு மையத்துக்குத் தகவல் செல்லும்.
அதன்பிறகு காவல்துறை செயலி மூலம் உடனடியாக அந்த வாடகைக்கார் உள்ள இடத்தை உடனடியாக கண்டுபிடித்து உதவிக்கு அங்கே காவல் படை செல்லும். கடந்த திங்கள் அன்று இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த செயலி மூலம் அவசர கால காவல் உதவி மட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பு குறித்து வீட்டில் உள்ளோர் கவலைப் பட வேண்டிய நிலையையும் குறைக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.