சென்னை:
பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு ஓரிரு நாளில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பல்வேறு விடுதிகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை தமிழகத்தின் புராதன நகரான மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னை முதல் மாமல்லபுரம் வரை இரு நாட்டு தலைவர்களும் செல்லும் பகுதிகள் மூழுவதும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாமல்லபுரம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
சீன அதிபர்-பிரதமர் மோடி வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்துள்ள 20-கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். வெண்ணைய் உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்துகிறது.
இன்றுமுதல், அங்கு புதியதாக வெளிநாட்டவர்கள் விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மாமல்லபுர புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.