புதுடெல்லி: மும்பையின் ஆரே வனப்பகுதியில், மெட்ரோ கார் ஷெட் கட்டுவதற்காக, இதற்குமேல் எந்த மரத்தையும் மாநகராட்சி நிர்வாகம் வெட்டக்கூடாது என்றும், ஆரே வனப்பகுதியை பாதுகாப்பது தொடர்பாக போராட்டம் நடத்தி கைதுசெய்யப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரே வனப்பகுதி தொடர்பாக தற்போதைய நிலை அப்படியே தொடர வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் நீதிமன்றம் ஆராயும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆரே வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு ஒரு பொதுநலன் தொடர்பான கடிதம் எழுதியிருந்தார் ரிஷவ் ரஞ்சன் என்ற சட்ட மாணவர்.

இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மெட்ரோ கார் ஷெட் கட்டுவதற்காக ஒரு பாரம்பரிய வனப்பகுதியை அழிக்க முடிவுசெய்த அரசு நிர்வாகத்தை எதிர்த்து பசுமை ஆர்வலர்களும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவையடுத்து, மராட்டிய மாநிலம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கும்வரை எந்த மரமும் வெட்டப்படாது என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.