பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை இடைத்தேர்தல்கள் முடியும் வரை ஒத்திவைத்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

அவரின் கட்சிக்குள்ளேயே மாவட்டப் பிரிப்பு தொடர்பாக இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன மற்றும் சிலர் உள்கட்சி கிளர்ச்சியில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

எனவே, டிசம்பர் 5ம் தேதி அம்மாநிலத்தின் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்து முடியும்வரை நிலைமையை அப்படியே நீட்டிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெல்லாரியைப் பிரித்து விஜயநகரா என்ற பெயரில் புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென்பது கோரிக்கை. காங்கிரஸ் சார்பிலிருந்து விஜயநகரா சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு, பின்னர் அதிருப்தி உறுப்பினராக மாறி தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆனந்த் சிங், மாவட்டத்தைப் பிரிக்க வேண்டுமென மனுதாக்கல் செய்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கை இடைத்தேர்தல் நாடகம் என்று அரசியல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், மாவட்டத்தைப் பிரித்தால் பெல்லாரி பற்றி எரியும் என்று பெல்லாரி நகர சட்டமன்ற உறுப்பினர் சோமசேகர ரெட்டி எச்சரித்துள்ளார். அவர் முதல்வர் எடியூரப்பாவுடன் முட்டிக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.