
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 16,000 பள்ளிக்கூடங்களை திறந்து மக்களுக்கு கல்வி அறிவை போதித்த பெருந்தலைவர் காமராஜர். அதுபோல ஏழை எளிய மக்களும் கல்வி பெறும் வகையில் மதிய உணவுத்திட்டம் எனும் மகத்தான திட்டம் வகுத்தவர்.
மாநிலம் முழுவதும் பல்வேறு அணைகள் கட்டி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர். 8 பேர் கொண்ட அமைச்சரவையைக் கொண்டு, தமிழகத்தில் பொற்காலத்தை உருவாக்கியவர்.
தமிழகத்திற்கு கல்விக்கண் பெருந்தலைவரான காமராஜர், இடைநிலைக் கல்வியைக் கூட எட்டாதவர். ஏழை எளிய மாணவர் உள்பட எந்தவொரு மாணவனும், வறுமையால் கல்வி இடை நிற்றல் கூடாது என்று மதிய உணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கியவர்.

தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த காமராஜர், போராட்டக்களம் பல கண்டார். சிறையும் சென்றார். 8 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தின் தமிழகத்தின் தலைவரானார். 1940 தொடங்கி 14 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்த காமராஜர், 1954ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார். தனது அமைச்சரவையில் 8 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அயராது பட்டவர். அவரது ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல பணிகள்தான் இன்றளவும் தமிழகத்தை வறுமையின் பிடியில் இருந்து பாதுகாத்து வருகிறது.
ஏராளமான அணைகளை கட்டிய பாசன வசதி செய்து விவசாயம் செழிக்கச் செய்தார். என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை தமிழகத்திற்க கொண்டு தந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார்.
தமிழகத்தில் கல்விக்கண் திறக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளே. மாநிலம் முழுவதும் அவர் புதிய பள்ளிக்கூடங்களை கட்ட நடவடிக்கை எடுத்ததோடு, ஏற்கெனவே இருந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றின் தரத்தை உயர்த்தவும் அரும்பாடுபட்டார்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது அவரது முக்கியக் கொள்கையாக இருந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார் காமராஜர். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, மகத்தான மதிய உணவுத்திட்டத்தின் மூலம் ஏழைச் சிறுவனின் வயிறு நிறைத்து வாட்டம் போக்கினார்.
காலமெல்லாம் மக்களின் நலன் சார்ந்த கனவு கண்ட அந்தப் பெருந்தலைவன் நாட்டின் தலைமை பொறுப்பிற்கு லால் பகதூர் சாஸ்திரி, அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகிய இருவரைக் கொண்டு வந்து கிங்மேக்கர் என்ற அடைமொழியைப் பெற்றவர்.

காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றிய அந்த மாபெரும் தலைவர் 1975ம் ஆண்டு தன்னை ஆட்கொண்ட தலைவனான மகாத்மா காந்தியின் பிறந்த நாளையே தனது நினைவு நாளாக்கி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தாய்த்திருநாட்டின் மேன்மைக்கு உழைத்த அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை மத்தியஅரசு வழங்கி கவுரவித்தது.
தமிழகத்தின் கல்விக்கண் திறந்த அவருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை தேடிக் கொண்டது தமிழக அரசு.
[youtube-feed feed=1]