காஞ்சிபுரம்:
அத்திவரதர் திருவிழாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, துப்புரவு ஊழியர்கள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 48நாட்கள் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரமுறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் நாடு முழு வதும் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்துவந்தனர். 1கோடிக்கும் மேற்பட்டோர் அவரை தரிசித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். இதன் காரணமாக மக்கள் கடலில் தத்தளித்த காஞ்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் 24 மணி நேரம் பணியாற்றி வந்தனர்.
‘விழா முடிந்ததும், அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்து ஒன்றரை மாதங்கள் கடந்தும் இன்னும் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.