சென்னை
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய உதவி ரூ.20 லட்சம் பெற்ற மும்பை தரகரை காவல்துறை தேடி வருகிறது.

தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வில் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்ததாகப் புகார் எழுந்தது. இதையொட்டி உதித் சூர்யா, அவர் தந்தை வெங்கடேஷ் மற்றும் உதித்துக்கு பதிலாகத் தேர்வு எழுதிய மாணவர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. தலைமறைவாக இருந்த உதித் சூர்யா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் திருப்பதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் வெங்கடேஷ் தனது மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மிகவும் விரும்பியதால் இந்த ஆள்மாறாட்ட நடவடிக்கையை நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்ய ஒரு மாணவரை அமர்த்தியதற்கு மும்பையைச் சேர்ந்த ஒரு தரகர் உதவி புரிந்ததாகவும் அவருக்கு வெங்கடேஷ் ரூ. 20 லட்சம் பணம் கொடுத்தாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையொட்டி தமிழக காவல்துறையினர் தேர்வு எழுதிய மாணவரையும் மற்றும், இந்த ஆள் மாறாட்டத்தை ஏற்பாடு செய்த மும்பை தரகரையும் தேடி வருகின்றனர். தேவைப்பட்டால் மும்பைக்கு வெங்கடேஷை அழைத்துச் சென்று அந்த தரகரைக் கண்டுபிடிக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]