டில்லி:
சமூக வலைத்தள கணக்குகளை வரைமுறைப்படுத்த, புதிய நெறிமுறைகளை உருவாக்குங்கள் என்று மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
போலிச் செய்திகள், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகில் உள்ள அனைவரையும் எளிதில் தொடர்பு கொள்வதற்கு பேருதவியாக சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக், வாட்சப், டிவிட்டர், ஸ்கைப், மெசஞ்சர், டிக்டாக், ஹெலோ போன்ற வலைதளங்கள் கருத்துக்களை எளிதிலும், விரைவாகவும் பரிமாறி கொள்ளக் கூடியவையாக உள்ளன.
சமூக வலைதளங்களை பெரும்பாலான மக்கள் உபயோகித்து வரும் வேளையில், தவறான செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம். உலகளவில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தாலும், இந்தியாவில் அதனால் ஏற்படும் ஆபத்து மற்றவர்கள் உயிரை பறிக்கும் வகையில் உள்ளன.
இதையடுத்து, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், சமூகவலைதள பயனர் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் எளிதாகி விட்டது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது என்றனர்.
எனவே சமூக வலைத்தள கணக்குகளை முறைப்படுத்த மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை விதிக்கவேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை 3 வாரத்திற்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் தனிமனித சுதந்திரத்தை மீறும் விதமாக இருக்கிறதா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.