நாக்பூர்: அடித்துக் கொலை செய்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் எந்த ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டரையும் அமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் கூறியுள்ளார்.
30 நாடுகளைச் சேர்ந்த 50 நிறுவனங்களிலிருந்து கலந்துகொண்ட 80 பத்திரிகையாளர்களுடன் நிகழ்ந்த சந்திப்பின்போது அவர் இதை தெரிவித்தார். மேலும், அனைத்து வடிவிலான வன்முறைகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிரி என்று அவர் கூறினார்.
காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கம், ஓரினச் சேர்க்கை மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நடைபெற்ற உரையாடல் மொத்தம் 2.5 மணிநேரங்கள் நீண்டது.
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் மட்டுமே நடைபெற்ற இந்த சந்திப்பில், மோகன் பக்வத்துடன், அமைப்பின் துணைத் தலைவர் சுரேஷ் ஜோஷி, இணை பொதுச் செயலாளர்கள் மன்மோகன் வைத்யா, கிருஷ்ணன் கோபால், வடக்குப் பிராந்திய பொறுப்பாளர் பஜ்ரன் லால் குப்த் மற்றும் டெல்லிப் பிரிவு தலைவர் குல்புஷன் அகுஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதானது, நாட்டின் பிற பகுதிகளுடன் அம்மக்களை இணைக்கும் நோக்கத்திற்காகத்தான். தங்களின் வேலை வாய்ப்பு மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டுவிடும் என்று அந்த மாநில மக்களின் அச்சம் தேவையில்லாதது என்று அவர் அந்த சந்திப்பில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.