சென்னை:

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 22, 23ந்தேதி  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு மூலம் தமிழகத்திற்கு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழகத்தில் உள் நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை களை ஈர்க்கும் வகையிலும் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த ஜனவரியில் நடத்தியது.

இந்த மாநாடு தொடர்பாக,   காஸ்கேட் நிறுவனம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கு பெரும் தனியார் நிறுவங்களின் பின்னணி விதிகளை வகுக்க கோரி சென்னை  உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு  தொடர்ந்திருந்தது.

அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே 2015 ல் நடந்த மாநாட்டில் தனியார் நிறுவனங்களின் பின்னணியை சரிவர பார்க்காமல் விட்டதால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. இது மீண்டும் நிகழாமல் இருக்க விதிகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது,  உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த தகவல்களையும் அதன் மூலம் ஏற்பட்ட முதலீடுகளையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தமிழகஅரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப் பட்டன என்பது பற்றியும், அதன் முதலீடுகள் பற்றியும் இன்னும் ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.