டில்லி
நிலவில் விக்ரம் லாண்டர் விழுந்துள்ள இடத்தில் சூரிய அஸ்தமனம் ஆக உள்ளதால் அதற்குள் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலத்தைச் செலுத்தியது. விண்கலத்தின் ஆர்பிடர் பகுதி நிலவை வெற்றிகரமாகச் சுற்றி வருகிறது. நிலவில் தரை இறங்கும் பகுதியான விக்ரம் லாண்டர் நிலவில் இருந்து 2.1 கிமீ தூரத்தில் இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது. இதனால் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் இது 98% க்கும் மேற்பட்ட வெற்றி என பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆர்பிடர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் விக்ரம் லாண்டர் நிலவில் உள்ளது கண்டறியப்பட்டது. விக்ரம் லாண்டருக்கான மின் சக்தி சூரிய ஒளியின் மூலம் பெறப்படுகிறது. நிலவின் அப்பகுதியில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்ததுள்ளது. நாளை முதல் விக்ரம் லாண்டர் உள்ள பகுதியில் சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும்.
இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லாண்டருடன் தொடர்பைக் கொண்டு வர பெரிதும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த விக்ரம் லாண்டர் மற்றும் அதன் பகுதியான பிரக்யான் ரோவர் ஆகியவை இந்திய நாள் கணக்குப்படி 14 நாட்கள் மட்டுமே இயங்க முடியும். எனவே இன்று தொடர்பு கிடைக்காவிடில் இனி விக்ரம் லாண்டர் எவ்வித பணியையும் செய்ய முடியாத நிலை உண்டாகும்.
ஆர்பிட்டரின் வாழ்நாளை தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகரித்துள்ள போதிலும் நிலவில் தரை இறங்கிய விக்ரம் லாண்டருடன் இந்த கடைசி நாளன்றாவது தொடர்பு கிடைக்காதா எனக் காத்திருக்கின்றனர்.