மதுரை: தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டப் பணிகளில் (குரூப் டி அல்லது லெவல் 1) அதிகளவு வடஇந்தியர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிராக்மேன், பாயின்ட்ஸ்மேன், ஹெல்பர் மற்றும் கேட் கீப்பர் உள்ளிட்ட 620 பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வட இந்தியர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இடஒதுக்கீடு மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாயும், அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விஷயம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மத்திய அரசு பழங்குடியினருக்கு வழங்கியுள்ள 7.5% இடஒதுக்கீடு, தமிழகத்தில் பழங்குடியின மக்கள்தொகை மிகவும் குறைவாக இருப்பது, வடஇந்திய மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் அதிகளவில் இருப்பது, ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் அவர்களில் அதிகளவிலானோர் சென்னை பிராந்தியத்திற்கே விண்ணப்பம் செய்வது மற்றும் தமிழக அளவில் இந்தப் பணிகளுக்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட அம்சங்களே, வடஇந்தியர் அதிகளவில் தேர்வு செய்யப்படுவதற்கு காரணம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.