சென்னை:

யிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? என்று பேனர் விவகாரத்தில், தமிழகஅரசுக்கு கேள்வி விடுத்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், அரசின் செயல்பாடுகளை  கடுமையாக சாடியது.

அதிமுகவினரின் கட்அவுட் கலாச்சாரத்துக்கு இளம்பெண் சுபஸ்ரீ அநியாயமாக பலியான நிலையில்,  கட்அவுட் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அதை கடைபிடிக்காத அரசு அதிகாரிகள் மீதும் நீதிபதிகள் கடுமையாக சாடி உள்ளனர்.

இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலைகளில் தேங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்று கடுமையாக கேள்வி விடுத்த நீதிபதிகள், உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா என்றும் கேள்வி விடுத்தனர்.

சென்னை பள்ளிக்கரணை அருகே பிடெக் முடிந்த இளம்பெண் ஒருவர், மேற்படிப்புக்காக கனடா செல்ல விருந்த நிலையில், அதுதொடர்பாக நேர்காணல் ஒன்றை சந்தித்துவிட்டு, வரும்போது, சாலையின் நடுவே அமைக்கப் பட்டிருந்த அதிமுக கட்சியினரின் பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஏறியது. இதன் காரணமாக அந்த  இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பேனர் குறித்து ஏற்கனவே வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழக தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், என.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

முன்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சேஷசாயி, தமிழகஅரசு தலைமை வழக்கறிஞரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தைக்கொண்டு நீங்கள் சாலைகள் வரைவதற்கு விரும்புகிறீர்கள் என்று கடுமையாக கேள்வி எழுப்பிய நீதிபதி,  இந்த நாட்டில் ஒரு குடிமகனின் வாழ்க்கை மீது அரசு  வைத்திருக்கும் மதிப்பு இதுதானா? அதிகாரத்துவத்தினர் ஏன் அவ்வளவு உணர்ச்சியற்றவர்களாக உள்ளார்கள்?  அந்த அரசியல்வாதி குடும்ப திருமணத்தை பிளக்ஸ் பலகைகள் இல்லாமல் நடத்த முடியவில்லையா? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும்,  இந்த நாட்டில் உயிர்களுக்கு பூஜ்ஜிய மரியாதை. இது அதிகாரத்துவ அக்கறையின்மை. மன்னிக்கவும், நாங்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி சத்தியநாராயணன்,  நாங்கள் டிசம்பர் 2018 முதல் பேனர் விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை பிற்பகல் மீண்டும் தொடங்கியது. அப்போது, விசாரணைக்கு, மாநகராட்சி சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், காவல்துறை தரப்பில் பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர் ஆல்பி வர்கீசும் ஆஜரானார். அவர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை தொடுத்தனர்.

உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? சுபஸ்ரீ விவகாரத்தில் விதிமீறி பேனர் வைக்க அனுமதி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன…?  என்ன நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் சுபஸ்ரீ தந்தை அளித்த புகாரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்ப்டடது?

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என்று தெரிவித்தவர், ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுப்பதை சிலர் நம்புகிறார்கள்.

அதுபோல உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா?

விதிகளை மீறி பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சகிள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், பேனர்கள் வைக்கக்கூடாது என ஏற்கனவே அரசியல் கட்சிகள் அறிவுறுத்தி உள்ளன என கூறினார்.