சென்னை:
பள்ளிக்கரனைப் பகுதியில் அதிமுக கட்சியினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில், அந்த பேனர்ஸ் அச்சடித்த அச்சகத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்துஉள்ளனர்.
குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பி.டெக் படித்த இளம்பெண் பட்டதாரி. வேலைக்காக கனடா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், நேற்று நேர்காணலில் பங்குபெற்று விட்டு மொபட்டில் திரும்பி வந்தபோது, பள்ளிக்கரணை சாலையின் நடுவே, அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவரின் இல்லத் திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்று திடீரென்று சுபஸ்ரீ மீது சாய்ந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் பலியானார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த பேனரை அச்சிட்ட சண்முகா என்ற அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
மேலும் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி பேனர் வைத்ததாக, அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
: